பேட்டிகள்

தினகரனை சிறையில் அடைத்ததற்குப் பிறகும் நாங்கள் களைத்துப் போய்விடவில்லை!

இலக்குவன்

திமுகவில் இப்போதைக்கு மிகவும் தயக்கமின்றி ஓங்கி ஒலிக்கும் குரல்களில் முக்கியமானது நாஞ்சில் சம்பத்தின் குரல். எதைப்பற்றியும் துணிச்சலாகக் கருத்துச் சொல்லக்கூடிய சம்பத், டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அவர் முன்பு சில கேள்விகளை முன்வைத்தோம்.

அதிமுக ஆட்சியின் இந்த ஓராண்டு பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

ஓராண்டு கால ஆட்சியில் அம்மா அவர்களின் அஸ்தமனம் ஆட்சிக்கும், கட்சிக்கும் சோதனையாக வந்தது. அம்மாவின் மறைவைத் தொடர்ந்து இந்தக் கட்சிக்குள்ளே ஊடுருவி கழகத்தைப் பிளப்பதற்கு சில சக்திகள் முயற்சித்தன. அதற்கு மூன்று முறை முதல்வர் பொறுப்பை அலங்கரித்த ஓ.பன்னீர் செல்வம் பலியானார். ஆட்சியை கவிழ்ப்பதற்கு போடப்பட்ட திட்டத்தை தந்திரமாக முறியடித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக்கி கழகம் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது.

குடிமராமத்து என்ற பெயரால் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு கிராமங்களில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மணற்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசே மணற்குவாரி ஏற்று நடத்தும் என அறிவித்திருக்கிறது. பள்ளிக் கல்வி துறையில் அறிவார்ந்த மாணவர்களை உருவாக்குவதற்கான முயற்சியில் கழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதை கல்வியாளர்களே இன்றைக்கு பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 140 ஆண்டு காலத்திற்குப் பிறகு தமிழகம் சந்திக்கிற இந்த வறட்சியை எதிர்கொள்ள 800 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்பட்டு குறைந்தபட்சம் பொது மக்களின் குடிநீர் தேவையை போக்க போர்க்கால முயற்சி எடுத்து வருகிறது அரசு. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்பி இருப்பதும் இந்த ஆட்சியின்  சாதனை. நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாடாளும் பிரதமரைச் சந்திப்பதற்கு வாய்ப்பு கேட்டால் மறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு கேட்டால் மறுக்கப்படுகிறது. ஆனால் ஒரு கவுதமி சந்தித்துவிடுகிறார். கட்சிக்குத் துரோகம் செய்த பன்னீர்செல்வம் சந்தித்துவிடுகிறார். முதலமைச்சர் அம்மாவின் காலத்திலேயே தமிழகத்தின் நலனுக்காக மோடி அரசிடம் வைத்த எந்தக் கோரிக்கையும் அந்த அரசு நிறைவேற்றி தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு வேண்டும் என்பது தமிழகத்தின் உரிமை சார்ந்த விஷயம். ஆனால், உச்சநீதிமன்றம் கெடு விதித்துவிட்ட நிலையில் இந்தியா முழுவதும் இருக்கிற நதிகளுக்கு, நதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் என்று மத்திய அரசு முடிவெடுத்ததன் மூலம் தமிழகத்தின் உரிமையை மிதித்து அழகு பார்க்கிறது. தமிழர்களைக் கொன்று குவித்த  சிங்கள பேரினவாத அரசோடு கூடி குலாவுகிறது. சேலம் உருக்காலை தனியார் மயம் ஆக்குவதற்கு எடுத்த முயற்சியை கைவிடுங்கள் என்று கேட்டால் மத்திய அரசு அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பி.ஜே.பி கட்சியை அம்மாவின் அஸ்தமனத்திற்குப் பிறகு,   சின்னம்மாவின் அஞ்ஞாத வாசத்திற்குப் பிறகு தமிழகத்தில் நிலை நிறுத்துவதற்கு இன்று மத்திய அரசு முயற்சிக்கிறது. நாட்டு மக்களின் நலன் கருதி அம்மாவின் அரசு திட்டங்கள் தீட்டினாலும் மத்திய அரசு தன்னுடைய ஒத்துழைப்பை தரவில்லை என்பதுதான் இந்த ஆட்சிக்கும் கட்சிக்கும் அமைந்திருக்கும் ஒரு சோதனை.

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருக்கிறார். துணை பொ.செ. தினகரனும் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் அதிமுகவில் செயல்படுவது எப்படி இருக்கிறது?

கேட்டினினும் உண்டு ஓர் உறுதி என்றார் வள்ளுவர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் கழகம் தன்னுடைய பயணத்தைக் கம்பீரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு  சின்னத்தை மீட்கப் பணம் கொடுக்க முயற்சித்தார் என்றொரு பொய் வழக்கை புனைந்து, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனை கைது செய்து சிறையில் அடைத்ததற்குப் பிறகும் நாங்கள் களைத்துப் போய்விடவில்லை. அவர் கைது செய்யப்பட்ட பிறகு மதுரை, மேலூர், உசிலம்பட்டி, தேவக்கோட்டை, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், திருவாடானை போன்ற ஊர்களில் என்னுடைய அனுபவத்தில் நான் சந்திக்காத மிகப் பெரிய கூட்டத்தை சந்தித்து வருகிறேன். புத்தம் புது இளைஞர்கள் காவிரி வெள்ளத்தைப் போல கழகத்தை நோக்கி வருகிறார்கள். ஆகவே, கழகம் இந்தச் சோதனையிலும் சுடச்சுட ஒளிர்கிற பொன்னாக மின்னுகிறது  என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தனி அணியாகச் சென்றுவிட்டார். இப்போது இருக்கும் முதலமைச்சரும் அவரது சகாக்களும் சசிகலா, தினகரன் அவர்களை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். அவர்களின் படங்களும் தலைமை கழகத்தில் இருந்து அகற்றப்பட்டது. இப்போது நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்கள்? உங்களுக்குக் கட்டளைகள் எங்கிருந்து வருகின்றன?

சிறையிலிருந்து தான் வருகின்றன. பொதுச் செயலாளரும், துணைப் பொதுச் செயலாளரும் கட்டளை இடுகிறார்கள். அதன்படிதான் நடக்கிறோம். எங்கள் பணிகளும் அப்படிதான் நடக்கிறது.

ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. பினாமி ஆட்சி நடக்கிறது என்று எதிர்க்கட்சித்தலைவர் சொல்வது பற்றி?

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அடிப்படையும் இல்லை. ஆதாரமும் இல்லை. இந்த ஆட்சி கவிழும், இந்தக் கட்சி கலகலத்துப் போகும் என்று அவர் கருதினார். ஓ.பன்னீர்செல்வம் என்கிற பச்சைத் துரோகியைப் பயன்படுத்தி கொல்லைப்புறம் வழியாக கோட்டை சிம்மானத்திற்கு வந்துவிடலாம் என நினைத்தார். அதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில், பேரவை தலைவர் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் பன்னீர்செல்வமும் ஸ்டாலினும் ஒரே குரலில் பேசினார்கள். ஒரு எதிர்க்கட்சி நாட்டு மக்களைச் சந்தித்து, அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆட்சிக்கு வரவேண்டுமே தவிர வேறு வழியில் வருவதற்கு முயற்சிப்பது போன்ற அறியாமை வேறொன்றுமில்லை. இந்த அரசை செயல்படாத அரசு, பினாமி அரசு என்று சொல்வதன் மூலம் ஸ்டாலின் அடைகிற மகிழ்ச்சி நிரந்தமானதல்ல. இந்த அரசு அதனுடைய இலக்கை நோக்கி பயணிக்கிறது. விளிம்பு நிலை மக்களின் துயரங்களில் பங்கெடுக்கிறது. தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து அதை தீர்ப்பதற்கு இந்த அரசு முயன்று வருகிறது. இதை ஸ்டாலின் புரிந்து கொண்டும் புரியாமல் பேசுவது அவரின் போதாமையையும், அறியாமையையும் காட்டுகிறது. அவருக்கு என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா சிகிச்சை மர்மம் பற்றித்தான் அதிமுக எதிரணியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அப்பல்லோவில்  சிகிச்சை புகைப்படம், வீடியோ வெளியிடவேண்டும் என்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அப்பல்லோவிலிருந்து 12 அறிக்கைகள் வெளியே வந்திருக்கின்றன. அம்மாவிற்கு சிகிச்சை அளித்தவர்கள் உலகப் புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவர்கள், உலகப் புகழ்பெற்ற சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கின்ற டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், கிருமித் தொற்று சிகிச்சைக்குப் புகழ்பெற்ற உலகளாவிய லண்டன் தாமஸ் மருத்துவமனை மருத்துவர் ரிச்சர்டு பீலே. ஆகவே இதில் மறைப்பதற்கும், மறுப்பதற்கும் ஒன்றுமில்லை. அம்மாவினுடைய மறைவிற்குப் பின்னால் மறைந்து நின்று அரசியல் செய்கிற ஈனத்தனத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த மலிவான அரசியலை பன்னீர்செல்வம் நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் நாட்டு மக்களால் தண்டிக்கப்படுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதியின் வைரவிழா ஏற்பாடுகள் பற்றி?

திராவிட இயக்கத்தில் ஆயிரம் பிறை கண்ட தலைவர் கலைஞர். அவருடைய கடினமான உழைப்பும், நீண்ட பயணமும், தொடர்ந்து தேர்தல்களில் அவர் பெற்ற வெற்றியும், இந்திய அரசியலில் பல தலைவர்களோடு அவர் கொண்டிருந்த நட்பும், அவருடைய பன்முக ஆற்றலும் வியக்கத்தக்கவை. நினைவாற்றலில் நிகரற்றவராக இருந்த அந்தத் தலைவர் இப்போது நினைவுகள் இல்லாமல் இருக்கிறார் என்று வருகிற செய்தியால் நெஞ்சு வலிக்கிறது. வைரவிழா காண்கிற திமுக தலைவர் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்கிறாரே? அவருக்கு உங்கள் பதில் என்ன?

சிங்கப்பூர் எலிசபெத் ஆஸ்பெட்டலில் போய் கேட்டால் தெரியும். யாருடைய சிஸ்டம் சரியில்லை என்பது.

அவர் அரசியலுக்கு வருவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

அவர் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து. லட்சக்கணக்கான இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்தியவர் ரஜினிகாந்த். அவர் நினைத்திருந்தால் தமிழகத்தின் இளைஞர்களை மது அருந்தாதீர்கள், சிகரெட் புகைக்காதீர்கள் என்று ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் கூட சிகரெட் பிடித்தோ, மது அருந்தியோ நடித்ததில்லை. ஆனால், எல்லா சமூக சீர்கேடுகளுக்கும் கர்த்தாவாக இருந்தவர் ரஜினிகாந்த். இன்றைக்கு ஏதோ தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என அவர் கனவு காண்கிறார்.

எம்எல்ஏக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகளுடன் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கிறார்கள். அதற்கு பல உள்ளர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. முதல்வரின் நிர்வாக முறை எப்படி உள்ளது?

முதல்வரின் நிர்வாகம் ஜனநாயகத் தன்மையோடு இருக்கிறது. அதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.

என்னதான்  ஒதுக்கி வைத்திருக்கிறோம் என்று எடப்பாடி அணி சொன்னாலும்கூட சசிகலாவின் கட்டளைப்படிதானே ஆட்சி நடக்கிறது? உண்மையைச் சொல்லுங்கள்..

சசிகலா கட்டளைப்படிதான் நடக்க வேண்டும். அப்படி நடக்கிறதா என்பது தெரியவில்லை.

ஜூன், 2017.